மாவுச்சத்து குறைவாக சாப்பிடுவதால் கொழுப்பு எப்படி கரைகிறது; கரைந்த கொழுப்பு என்னவாகிறது ?

மாவுச்சத்து குறைவாக சாப்பிடுவதால் கொழுப்பு எப்படி கரைகிறது; கரைந்த கொழுப்பு என்னவாகிறது ?

The English Version of this article can be found at Basis of Paleo : How Fat Dissolves and What happens to that Fat that dissolves ?

-oOo-

மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு
– வைரமுத்து

உடலில் உள்ள கொழுப்பானது நிரந்திரமானது அல்ல. அது மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும், உடலில் புது கொழுப்பு உருவாகிக்கொண்டே இருக்கிறது. அதே போல் இருக்கும் கொழுப்பு கரைந்து கொண்டே உள்ளது

உங்கள் வீட்டின் மாடியில் இருக்கும் தொட்டியை கற்பனை செய்து கொள்ளுங்கள்
கிணற்றில் இருந்து அல்லது கீழிருக்கும் தொட்டியில் இருந்து மாடியில் இருக்கும் தொட்டிக்குள் நீர் வருகிறது. மாடியில் இருக்கும் தொட்டியில் இருந்து வீட்டிற்கு நீர் செல்கிறது. இந்நிலையில்

 • தொட்டிக்குள் வரும் நீரின் அளவும், தொட்டியில் இருந்து வெளியில் செல்லும் நீரின் அளவும் ஒன்றாக இருந்தால், தொட்டிக்குள் இருக்கும் நீரின் அளவு அதே போல் இருக்கும்
 • தொட்டிக்குள் வரும் நீரின் அளளை விட தொட்டியில் இருந்து வெளியில் செல்லும் நீரின் அளவு அதிகமாக இருந்தால் இருந்தால், தொட்டிக்குள் இருக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வரும்
 • தொட்டிக்குள் வரும் நீரின் அளளை விட தொட்டியில் இருந்து வெளியில் செல்லும் நீரின் அளவு குறைவாக இருந்தால் இருந்தால், தொட்டிக்குள் இருக்கும் நீரின் அளவு அதிகரித்து கொண்டே வரும்

இப்பொழுது கொழுப்பு கதைக்கு வருவோம்

 • கொழுப்பு உற்பத்தியும், கொழுப்பு கரைவதும் ஒரே அளவாக இருந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதே போல் இருக்கும்
 • கொழுப்பு உற்பத்தியை விட கொழுப்பு கரைவது அதிகம் இருந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும்
 • கொழுப்பு உற்பத்தியை விட கொழுப்பு கரைவது குறைவாக இருந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கும்

இரு வகை கொழுப்புகள்

 1. கட்டுமான கொழுப்புகள். இவை பெரும்பாலும் பாஸ்போலிப்பிட் வகையை சார்தவை. செல்கள் மற்றும் திசுக்களின் கட்டுமானத்தில் இவை ஈடுபடுகின்றன
 2. சேமிப்பு கொழுப்பு. இந்த கொழுப்பு தான் சேமிப்பில் பங்கு வகிக்கிறது. இவை பெரும்பாலும் டிரைகிளிசரைட் ஆக உள்ளன. இந்த வகை கொழுப்பு தான் வாயிற்றின் முன் சுவற்றிலும், இடுப்பின் பின் பகுதியிலும் சேர்ந்து எடையை அதிகரிக்கின்றன

சேமிக்கப்படும் கொழுப்புகள் / டிரைகிளிசரைட்கள் எப்படி உருவாகின்றன

சேமிப்பு கொழுப்புகள் இரு மூலப்பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன

 1. கொழுப்பு அமிலங்கள்  : இவை உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து ஆகியவற்றில் இருந்து பெறப்படுகின்றன
 2. கிளிசரால் பாஸ்பேட் : இது மாவுச்சத்தில் இருந்து பெறப்படுகின்றது

எனவே, கொழுப்பு சேமிக்கப்படவேண்டும் என்றால், அந்த நபர் கொழுப்பும், மாவுச்சத்தும் சாப்பிட வேண்டும். அல்லது மாவுச்சத்து மட்டும் சாப்பிட்டால் போதும். அவர் வெறும் கொழுப்பு மட்டும் சாப்பிட்டால் கொழுப்பு சேமிப்பிற்கு தேவையா மூலப்பொருட்கள் குறைவாகவே இருக்கும். எனவே வெகு குறைவான கொழுப்பே சேமிக்கப்படும் 

அதே போல், இந்த சேமிப்பு கொழுப்பு உருவாவதை சில இயக்குநீர்கள் (ஹார்மோன்கள்) ஆதரிக்கின்றன. அதில்முக்கியமானது இன்சுலின்

சேமிக்கப்பட்ட கொழுப்பு எப்படி உடைகிறது

சேமிக்கப்பட்ட கொழுப்புகள் / டிரைகிளிசரைட்கள் ஹார்மோன் சென்சிடிவ் லைப்பேஸ் (Hormone Sensitive Triglyceride Lipase) என்ற ஒரு இயக்குநீரால் (enzyme) உடைக்கப்படுகின்றன. அவை உடைந்து கிளிசரால் பாஸ்பேட்  மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆக மாறுகின்றன. இந்த செயலை, அதாவது கொழுப்பு உடைபடும் செயலை இன்சுலின் எதிர்க்கிறது. கொழுப்பு உடைபடுவதை கீழ்க்கண்ட இயக்குநீர்கள் ஆதரிக்கின்றன

 1. அட்ரினலின்
 2. நாரட்ரினலின்
 3. குளுக்ககான்
 4. வளர்ச்சி இயக்குநீர் (Growth Hormone)
 5. குளுக்கோ கார்டிகாய்ட்கள் (Glucocorticoids)
 6. ACTH
 7. MSH
 8. TSH
 9. வாசோபிரஸ்சின் (Vasopressin)

இன்சுலினின் வேலை

இன்சுலின்

 1. டிரைகிளிசரைட்கள் உருவாவதை ஆதரிக்கிறது. அதாவது கொழுப்பு உருவாவதை ஆதரிக்கிறது, கொழுப்பு உருவாகும் செயலை துரிதப்படுத்துகிறது
 2. டிரைகிளிசரைட்கள் உடைவதை எதிர்க்கிறது. அதாவது கொழுப்பு கரைவதை மட்டுப்படுத்துகிறது

சுருங்க சொல்வது என்றால் இன்சுலின் ஒரு நபரை குண்டாக மாற்றுகிறது. அவரது உடல் எடையை கூட்டுகிறது

மாவுச்சத்து உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்

மாவுச்சத்து உணவு சாப்பிட்டால்

 1. அதிகம் கிளிசரால் பாஸ்பேட் கிடைக்கும். அதாவது கொழுப்பு உருவாகும் மூலப்பொருள் அதிகம் கிடைக்கும்
 2. அதிகம் கொழுப்பு அமிலங்கள் செய்யப்படும். அதாவது கொழுப்பு உருவாகும் மூலப்பொருள் அதிகம் செய்யப்படும்
 3. அதிகம் இன்சுலின் சுரக்கும். அதாவது கொழுப்பு உருவாக வேலைசெய்யும் இன்சுலின் அதிகரிக்கும். கொழுப்பு உடைபடுவதை தவிர்க்கும் இன்சுலின் அதிகரிக்கும்.

மூலப்பொருட்களும் அதிகரித்து, இயக்குநீரும் அதிகரித்தால் என்ன ஆகும். அதிக கொழுப்பு உருவாகும். எனவே, அந்த நபர் தனது உணவில் கொழுப்பினை குறைவாக உட்கொண்டால் கூட அவரது உடலில் அதிகம் கொழுப்பு உருவாகிறது

மாவுச்சத்து அதிகம் சாப்பிடும் போது, உடலில் கொழுப்பு உருவாவும் விகிதம் அதிகமாகவும், கொழுப்பு உடைபடும் விகிதம் குறைவாகவும் இருப்பதால் அந்த நபரின் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது 

குறைமாவு உணவு உட்கொள்ளும் போது என்ன நடக்கிறது

சாப்பிடும் உணவில் மாவுச்சத்து இல்லை என்றாலோ, அல்லது மாவுச்சத்து குறைவாக இருந்தாலோ,

 1. கிளிசரால் பாஸ்பேட் குறைவாகவே இருக்கும். அதாவது கொழுப்பு உருவாகும் மூலப்பொருள் குறைவாகவே இருக்கும்
 2. இன்சுலின் சுரப்பது குறையும். அதாவது கொழுப்பு உருவாக வேலைசெய்யும் இன்சுலின் குறையும். கொழுப்பு உடைபடுவதை தவிர்க்கும் இன்சுலின் குறையும்
 3. அதே நேரம், கொழுப்பு உடைபடுவதை ஆதரிக்கும் அட்ரினலின், நாரட்ரினலின், குளுக்ககான், வளர்ச்சி இயக்குநீர் (Growth Hormone), குளுக்கோ கார்டிகாய்ட்கள் (Glucocorticoids),
  ACTH, MSH, TSH, வாசோபிரஸ்சின் (Vasopressin) ஆகியவற்றின் செயலால் கொழுப்பு விரைவாக உடைபடும்.

மாவுச்சத்து குறைவாக உட்கொண்டால், கொழுப்பு உருவாகும் விகிதத்தை விட கொழுப்பு உடைபடும் விகிதம் அதிகரிக்கிறது. எனவே உடம்பில் இருக்கும் கொழுப்பு கரைந்து கொண்டே வருகிறது. இதனால் எடை குறைகிறது, வயிற்றில், இடுப்பில் இருக்கும் கொழுப்பு குறைவதால் தொப்பை குறைகிறது

உடைபடும் கொழுப்பு என்னவாகிறது

நாம் ஏற்கனவே பார்த்தது போல், கொழுப்பு உடைபட்டும் அது கிளிசரால் பாஸ்பேட்டாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் ஆகிறது. இதில்

 1. கிளிசரால் பாஸ்பேட் என்பது டைஹைறாக்சி அசிடோன் பாஸ்பேட்டாக மாறி கிளிசரால்டிஹைட் பாஸ்பேட்டாக மாறுகிறது.  கிளிசரால்டிஹைட் பாஸ்பேட் என்பது குளுக்கோஸ் உடைபடும் போது வரும் ஒரு வேதியல் பொருள் (intermediary in the breakdown of Glucose in Hence this enters the Glycolytic Pathway).  இது சக்தி பெற பயன்படுகிறது
 2. கொழுப்பு அமிலங்கள் எரிக்கப்பட்டு உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது
Scientific Basis of Paleo
Scientific Basis of Paleo

11 thoughts on “மாவுச்சத்து குறைவாக சாப்பிடுவதால் கொழுப்பு எப்படி கரைகிறது; கரைந்த கொழுப்பு என்னவாகிறது ?”

 1. இன்சுலீன் கொழுப்பை ஆதரித்து கூட்டுகிறது என்று கூறுகிறீர்கள். சரி, அப்படியென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட நபர் இளைக்க வேண்டுமே. மாறாக அவர் எடை கூடுகிறார்.
  தயவு செய்து உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்

  1. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர் இன்சுலின் அல்லது இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும் மாத்திரை எடுக்கவில்லை என்றால் அவர் மெலிந்து விடுவார்
   அவர் எடை கூடுவதற்கு காரணம் அவர் எடுக்கும் மாத்திரைகளும் இன்சுலினும் தான்.

   கர்ப்பகாலத்தின் போது தாய்க்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தை குண்டாக பிறக்கும்
   வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தை மெலிந்து பிறக்கும்
   இதுவும் இதே காரணத்தால் தான்

Comments are closed.